மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (23) மேலும் உயர்வைச் சந்தித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93.40 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.3 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அதன் விலை 2.722 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியற்ற சூழல் மற்றும் விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் இந்த சடுதியான விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலகளாவிய விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பானது, இறக்குமதி நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, போக்குவரத்து செலவுகள் மற்றும் மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
