சிக்கிம் மாநிலத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட பயங்கர மீத்தேன் வாயு வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுரங்கத்திற்குள் 18 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (20) மாலை சுமார் 3.40 மணியளவில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மீத்தேன் வாயு வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வெடிவிபத்தின் வீரியத்தால் ஏற்பட்டமணசரிவுக் காரணமாக சுரங்கப்பாதையின் நுழைவாயில் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால், முன்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறி தப்பிய நிலையில், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் பணியாற்றி வந்த 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் ஆய்வுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சுரங்கத்திற்குள் இன்னும் சிக்கியுள்ள 18 தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, பொலிஸ் படையினர், மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து தீவிரமாகப் தேடி வருகின்றனர்.
சுரங்கத்திற்குள் அடர்த்தியாக பரவியுள்ள அபாயகரமான மீத்தேன் வாயு, போதிய ஒக்சிஜன் இல்லாத சூழல் மற்றும் குறைவான பார்வைத்திறன் காரணமாக மீட்புப் படையினருக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
