வெல்லவாயவில் நிலச்சரிவு! திடீர் நில வெடிப்பு மற்றும் பிளவு குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

வெல்லவாய பிரதேச செயலகத்தின் மகாஅரகம உல்கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உல்கந்த மலைத்தொடரின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது மண் மேடுகளும் பெரிய மரங்களும் சரிந்து விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலச்சரிவு குறித்து உடனடியாக விசாரித்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை மொனராகல மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மண்சரிவு ஏற்படுவதற்கு முன்னர், நிலத்தில் திடீரென ஏற்படும் வெடிப்புகள் அல்லது பிளவுகள், மரங்கள், மின் கம்பங்கள் அல்லது மதில்கள் திடீரென ஒரு பக்கமாக சாய்தல், தரையிலிருந்து அல்லது நீரூற்றுகளிலிருந்து திடீரென சேற்று நீர் வெளியேறுதல், கதவு மற்றும் ஜன்னல்கள் சரியாக மூட முடியாமல் போதல் அல்லது நிலத்தில் அதிரும் சத்தம் கேட்டல் போன்ற அறிகுறிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *