உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன் தலைமையில்
இன்று இடம் பெற்றது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகம்
புகைத்தல் பாவனையற்ற பிரதேசமாக இன்று முதல் பிரகடணப்படுத்தப்பட்டது.
புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள், புற்றுநோய், இதய நோய்கள், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாக கொண்டு இந் நிகழ்வு இடம் பெற்றது.
இவ் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளாக ‘கவர்ச்சியின் முகமூடியை அகற்றுவோம் – நிக்கோட்டின் மற்றும் புகையிலை அடிமைத்தனத்தை எதிர்ப்போம்’
என்பதை மையமாக கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு புகையிலை மற்றும் நிக்கோட்டின் பொருட்கள் கவர்ச்சிகரமாக சந்தைப்படுத்தப்படுகின்றன என்பதையும், அவற்றின் பின்னணியில் உள்ள ஆபத்துகளை வெளிக்கொணர்வதையும் வலியுறுத்துகிறது.
நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், வைத்திய நிபுணர்கள், உயர் வைத்திய அதிகாரிகள், சிரேஸ்ட சாரண மாணவி செல்வி மதிவண்ணன் ஸ்ருதிகா , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சாரணிய மாணவியினால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்ட்டிகர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
