கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் – அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – மக்கள் தவிப்பு

நாடு முழுவதும் அடைமழை பெய்து வரும் நிலையில், கடந்த 22 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கஸ்பேவ பகுதியில் 204 மில்லி மீறறர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் வேயங்கொடையில் 145.5 மில்லி மீற்றர் மழையும், வத்துபிட்டிவெலவில் 105.5 மில்லி மீறறர் மழையும் பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிலிமலை பகுதியில் 121 மில்லி மீற்றர் மழையும், களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமவில் 102.5 மில்லி மீறறர் மற்றும் ஹொரணையில் 101.5 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளன.

மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினத்தில் 200 மில்லி மீறறருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கம் காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஆர்மர் பார்பர் பகுதியிலுள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாடசாலை மற்றும் பணிக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *