மட்டக்களப்பில் தடை செய்யப்பட்டுள்ள உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரை வலை மீன்பிடியை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி கடற்றொழில் மட்டு கல்லடியில் உள்ள மாவட்ட பணிமனையின் முன்னால் இன்று (05) மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இலங்கை கரைவலை உரிமையாளர் சங்கத்தின் மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.சத்தியரூபன் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து வாகரை தொடக்கம் கல்லாறு வரையிலான கரைவலை மீன்பிடி சங்கங்கள் மீனவர்கள் இன்று கல்லடி பாலத்துக்கு அருகில் காலை 9.30 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்தனர்.
இதனையடுத்து மீனவர்களின் அவல நிலை உங்களுக்கு தெரியவில்லையா? கரைவலைதான் எங்கள் வாழ்வாதாரம், மீனவர்களை பாதுகாக்க முடியாதா? நவீன தொழில்நுட்பத்தை மீனவர்களும் பயன்படுத்த முடியும், கரைவலை இழுக்கும் இயந்திரத்தை தடைசெய்யாதே, கரைவலை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே, உழவு இயந்திரத்தை திரும்ப பயன்படுத்து அனுமதி தாருங்கள் என வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து கடற்றொழில் நீரியல் துறை பணிமனைக்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியிடம் தமது கோரிக்கையை முன்வைத்து மகஜர் ஒன்றை மீன்பிடி திணைக்கள பணிப்பாளரிடம் கையளித்த பின்னர் பகல் 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறிச்சென்றனர்.
