24.11.2025 திங்கட் கிழமை மாலை 4.00 மணி
இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறு தினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்று தெற்கு நோக்கி, ஆரம்பத்தில் முழுவதும் இலங்கை நிலப்பகுதியூடாக நகர்ந்து பின்னர் இலங்கையின் கிழக்கு கரையில் அரைவாசிப்பகுதி நிலப்பகுதியிலும் அரைவாசிப்பகுதி கடற்பகுதியுமாக நகர்ந்து எதிர்வரும் 27.11.2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து வடக்கு மாகாணத்தினை அண்மித்து, எதிர்வரும் 30.11.2025 அன்று வடமாகாணத்தில் இருந்து நீங்கி மேலும் வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதே வேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தில் ஏற்கெனவே பல ஆறுகள் அவற்றின் கொள்ளளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற கன மழை காரணமாக நிலம் நிரம்பியுள்ளது. அதேவேளை மிகப்பெரும் கன மழை எதிர்வரும் நாட்களிலும் கிடைக்கவுள்ளன.
==================================
1. ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
