பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து, உயரமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். 

மேலும், சீனா, பெரு மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் மற்றும் மைக்ரோனேசியாவின் சில தீவுகளிலும் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், உலகை இதுவரை தாக்கிய ஆறாவது வலிமையான நிலநடுக்கமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில், ஜப்பானைத் தாக்கிய சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எனினும் அங்கிருந்து அனைத்து ஊழியர்களும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த அணுமின் நிலையத்தை மேற்பார்வையிடும் அரசுக்குச் சொந்தமான டோக்கியோ மின்சார நிறுவனம் (TEPCO) அறிவித்துள்ளது. 

மின் நிலையத்தில் அசாதாரண நிலைமைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதற்கிடையில், டோக்கியோவின் வடக்கே பசிபிக் கடற்கரையில் உள்ள செண்டாய் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை மூடுவதற்கான முடிவைத் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *