வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் இன்று வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பம், மனித உடலால் உணரப்படும் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கவும், தூங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், முடிந்த வரையில் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், நிலவும் வெப்பமான காலநிலை குறித்து சுகாதார நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
இந்த நாட்களில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது குறித்து பெறப்பட்ட சுகாதார ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் காலநிலையுடன் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்தை நோக்கு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக உணர்திறன் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று மருத்துவர் அஜித் குணவர்தன மேலும் அறிவுறுத்தினார்.