கடந்த 24 மணித்தியாலங்களில் பல ஆற்றுப் படுக்கைகளில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (12) காலையில் தெரிவித்தார்.
குறிப்பாக கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை மற்றும் யான் ஓயா படுக்கைகளின் மேல் பகுதிகளுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களுக்கும் 50 மி.மீற்றரை அண்மித்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக சில ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பைக் காட்டினாலும், அது வெள்ள மட்டம் வரை உயரவில்லை என சூரியபண்டார தெரிவித்தார்.
அத்துடன், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தைக் கருத்தில் கொள்ளும்போது, சுமார் 34 பிரதான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முக்கியமாக தெதுறு ஓயா, இராஜாங்கனை, நாச்சதூவ, யான் ஓயா, பதவிய, லுனுகம்வெஹர மற்றும் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்மட்டம் குறைக்கப்படுவதாகவும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
