வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது பெய்துவரும் கனமழை நாளை வியாழக்கிழமை வரை தொடரும் வாய்ப்பிருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பீட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் கடந்த திங்கட்கிழமை தினம் உருவான தாழமுக்கம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
குறிப்பாக இத்தாழமுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இன்று புதன்கிழமை அதிகாலை வடக்கு மாகாணத்துக்கு மிக அருகாக நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை நாளை வரை தொடரும் வாய்ப்பிருக்கிறது .
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
