மியான்மர் பூகம்பத்தில் மூவாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தண்டியுள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. 72 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.

இதனிடையே, மியான்மரில் நிவாரணப் பணிகளுக்காக அங்குள்ள சீனத் தூதரகம், உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு 1.5 மில்லியன் யுவான் ரொக்கம் வழங்கியுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. மியான்மரின் ராணுவ அரசாங்கம் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி வாகன அணிவகுப்பை எச்சரிக்கும் வகையில் தங்களின் துருப்புகள் வானத்தை நோக்கிச் சுட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தங்களுடைய மீட்புக் குழுவும் பொருள்களும் பாதுகாப்பாக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூசியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மியான்மர் அரசை வழிநடத்த இராணுவம் போராடி வருகிறது. அங்கு உள்நாட்டுப் போர் வெடித்ததைத் தொடர்ந்து சுகாதாரம், பொருளாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் சீர்குலைந்தன. மியான்மர் பூகம்பத்தால் 6 பிராந்தியங்களில் 2 கோடியே 80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு, தங்குமிடம்,குடிநீர், சுகாதாரம் மற்றும் மனநலம், பிற சேவைகளுக்காக 12 மில்லியன் டொலர் அவசர நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மியான்மரை 7.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் தாக்கிய ஐந்து நாட்கள் ஆன நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து வரும் நிலையில், தலைநகர் நேப்பிடாவில் உள்ள ஹோட்டல் இடிபாடுகளில் இருந்து ஒருவர் புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார். இந்தப் பின்னணியில், மனிதாபிமான உதவிகளுக்காக மக்களை அணுக இருக்கும் தடைகளை அகற்றவும், உதவி செய்யவரும் அமைப்புகளுக்கு இருக்கும் தடைகளை நீக்கவும் இராணுவ அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *