மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு மாதமாக மின்சாரம் துண்டிப்பு – பொது மக்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலுள்ள சில  கிராமங்களுக்குச் செல்லும் அதிஉயர் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்தனால்  மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தில் கிடப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.  

கடந்த 2024 நவம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கல்லடிவெட்டை, கானாந்தனை பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதை  அருகில் செல்லும் அதிஉயர் சக்தி கொண்ட மின்சார தூண்கள் சரிந்து நிலத்தில் வீழ்ந்ததையடுத்து மின்சார கம்பிகள் அறுந்ததையடுத்து அந்த பிரதேசங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் இந்த கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விகற்க முடியாமல் போயுள்ளதுடன் யானை மற்றும் காட்டு விலங்குகளின் அட்டகாசங்களுக்கு மத்தியில் தினமும் இரவில் உயிரை கையில் பிடித்தவாறு குப்பிலாம்புடன் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதேவேளை மின்சார கம்பிகள் அறுந்து நிலத்தில் கிடப்பதால் நிலத்தில் மின்சார தாக்கம் ஏற்படும் என்பதால் அந்த பகுதியால் பிரயாணிக்க முடியாமல் உள்ளதுடன் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும்  மின்சாரசபை எடுக்கவில்லை என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரிந்து வீழ்ந்த மின்சார தூண்களை சரிசெய்து மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *