மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை – மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு

மட்டக்களப்பில் 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளில் இடைவேளையின் போது மாணவர்கள் சிற்றுண்டி சாலையில் வாங்கிய உணவு ஒவ்வாமையினால் வாந்தி தலை சுற்று ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் துரிதமான நடவடிக்கையினால் ஆம்புலன்ஸ் வண்டிகளில் துரிதமாக வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு பிராந்திய  சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பாடசாலை சிற்றுண்டி சாலைக்கு ஒரு நபரே உணவுகள் வினியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் குறித்த பாடசாலையில் புட்டு வாங்கி உண்டமையினால் இந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

குறித்த பாடசாலைகளில் உணவு சுகாதாரத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக  இரசாயன பகுப்பாய்வுகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *