மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளைத் தடுக்கும் நோக்குடன், இன்று (27) காலை போக்குவரத்து திணைக்களமும் பொலிஸாரும் விசேட செயல் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது பிரதான வீதிகள் வழியாக பயணித்த வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. போக்குவரத்து பயன்பாட்டிற்கான விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களின் ப்ரேக்குகள், டயர்கள், சிக்னல் லைட்டுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன. பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட வாகனங்களை திருத்தி அமைப்பதற்காக 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாச காலத்திற்குள் குறைகளை சரிசெய்ய தவறினால், உரிய வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இன்றைய விசேட பரிசோதனையின் போது சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. இந்த செயல் திட்டத்தின்போது மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயர் அதிகாரிகள், மற்றும் போக்குவரத்து பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.
