புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அதற்கமைய, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 

குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து பொலிஸார் உட்பட சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனைகளின் போது புத்தாண்டு விற்பனையில் ஈடுபட்ட 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தை மீறி, நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் செயல்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் ஆடைகள், பாதணிகள் மற்றும் மின் சாதனங்கள் விற்பனை செய்யும் Sale தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி, மேற்படி சட்ட நடவடிக்கைகளை எடுத்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் பட்டாசு விபத்துக்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பட்டாசுகளைப் பயன்படுத்தும்போது அதிக அவதானம் செலுத்த வேண்டும் என்று வைத்திய நிபுணர் டாக்டர் அனுஷா தென்னேகும்புர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *