சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்துமாறு கோரி வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு !
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று வரை வெளிப்படுத்தப்படாத விசாரணைகள் இன்றியும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீதான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி நீதியான விசாரணைகளை நடத்த கோரி மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை பிரதான வீதியில் இன்று (28/06) கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக் கையெழுத்து பெறும் நிகழ்வின் போது பெருமளவான பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தார்கள்.
இக் கையெழுத்து நடவடிக்கையானது தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் நவராசலிங்கம் நிமல்ராஜ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான, கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை, அதற்கு எவ்வேளையிலும் அவரும் மறுப்புத் தரிவிக்கவோ பின்வாங்கவோ இல்லை எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குளாகியிருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க சந்திரகாந்தன் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர்காலத்தில் சிறுபான்மை இனங்களிலிருந்து இவ்வாறான தேசபக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
ஆகவே சந்திரகாந்தன் அவர்கள் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






