பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலையடுத்து, 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கிவந்த குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்று(14) நண்பகல் வேளையில் தீப்பரவல் ஏற்பட்டது.
மூன்று மணி நேர முயற்சியின் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அதற்கு அருகிலிருந்த இரசாயனக் களஞ்சியத்தில் தீப்பரவல் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும் அவை அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளன என தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
அருகில் இருந்த இரசாயனக் களஞ்சியத்தில் பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெரோக்சைட்டு போன்ற தீயை தீவிரமாக்கும் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த இரசாயனங்கள் எரியும்போது வெளியாகும் நச்சு வாயுவை சுவாசித்ததாலேயே பாதிக்கப்பட்டவர்கள் “உடனடியாக” இறந்திருக்கலாம் என தீயணைப்பு சேவையின் பணிப்பாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
