கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலை வளாகமானது, சுமார் ஐந்து அடிக்கும் மேற்பட்ட அளவு நீரில் மூழ்கியுள்ளதால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேநேரம் ஏனைய நோயாளிகள் வாரியபொல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் சிடி ஸ்கேன் இயந்திரம் சேதமைந்துடைந்துள்ளதாகவும் பல சிகிச்சை அறைகள் நீரில் மூழ்கியிருப்பதாகவும் பல சவால்களுக்கு முகம் கொடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேவையான மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படும் என்றும் தற்போது எதுவித காலக்கெடுவும் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு பணிகள் முடியும்வரை சிலாபம் பொது வைத்தியசாலைக்கு எந்த நோயாளியையும் அழைத்துவர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
