வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, நாளை (09) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழையும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 முதல் 150 மி.மீ வரையான பலத்த மழையும் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும், ஊவா மாகாணத்தின் மொனராகலை, பதுளை மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தரை மற்றும் கடல் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
