கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள் – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அரசாங்கத்தினுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்தார். அவருக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்பார்த்த அளவு இடம்பெறவில்லை. அதேபோல் கிழக்கு மாகாணம் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளதென்றும் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நேற்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த வரவு செலவுத்திட்டத்தில் கிழக்கு மாகாணம் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை நான் இங்கு சொல்ல வேண்டும். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கென்று எந்தவொரு விஷேட நிதியும் ஒதுக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்திற்கு பாரியளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். அதேபோல் கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் பிரதேசமாகவும் காணப்படுகிறது. இருந்தபோதிலும் கிழக்கு மாகாண சபைக்கு கூட போதியளவு நிதி அரசாங்கத்தினால் கிடைப்பதில்லை. இந்த மாகாணம் இயற்கை, செயற்கை அனர்த்தங்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் பிரதேசமாக இருக்கிறது. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாலங்கள், பாடசாலைகளை புனரமைப்பதற்கு தேவையான எந்தவொரு ஒதுக்கீடும் இதுவரை செய்யப்படவில்லை. எனவே இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டாலும் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்ய முடியும் ஆகவே கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல்வேறு தேவைகளோடு காணப்படுகிறது. போதுமான கட்டிடங்கள் இல்லை, ஒவ்வொரு வருடமும் வெள்ளம் வரும்போது நீர் நிறைந்து மூடவேண்டிய நிலை காணப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியாத அளவு வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் பல்கலைக்கழகத்தை வெள்ள அனர்த்தத்திலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதுடன் ஒலுவில் துறைமுகத்தை பிரயோசனப்படும் வகையில் மாற்றுவதற்கு தேவையான வசதிகளை செய்து கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. 

அதேபோல், கிழக்கு மாகாணமானது மீன்பிடி துறையில் முன்னேற்றமடைய வேண்டிய மாகாணமாக இருந்தபோதிலும் வாழைச்சேனை துறைமுகத்தில் எந்தவொரு வசதியும் இல்லாமல் இருக்கிறது அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் முழுமையாக இயக்க முடியுமாக இருந்தால் பல வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் எனவும் அவரது உரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *