இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள தித்வா சூறாவளி! 85 பேர் மரணம்

சீரற்ற காலநிலை காரணமாக, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இதுவரை பதிவான மொத்த பலி எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. 

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

சீரற்ற காலநிலை காரணமாக, நேற்றையதினம் பிற்பகல் வேளையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு அனர்த்தங்கள் பதிவாகியிருந்தன. 

இதன்படி, கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஐவர் பலியானதோடு,  மேலும் 12 பேர் காணாமல் போயிருந்தனர். 

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால் 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 27இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும்,  கேகாலை, புலத்கோஹுபிட்டியவில் ஐந்து வீடுகள் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வீடுகளில் வசித்த சுமார் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பகுதிக்குச் செல்வது மிகவும் சவாலானதாக காணப்படுகின்றது.

நாட்டை உலுக்கிய சூறாவளியின் காரணமாக, பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மகாவலி, களனி, களு மற்றும் மாணிக்க கங்கைகளை சூழவுள்ள பகுதிகளிலும், தெதுரு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மல்வத்து ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாரிய வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

களுகங்கைப் படுகையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, மற்றும் எலபாத உட்பட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல, அகலவத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அத்தனகலு ஓயா படுக்கையின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கம்பஹா நகரப் பகுதிக்கு நீர்ப்பாசனத் துறை நேற்று பிற்பகல் சிறப்பு வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டது.

அடுத்த சில மணி நேரங்களுக்குள் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமைகள் ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அறிவித்தது.

உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நீர்ப்பாசனத் துறை பொதுமக்களை அறிவுறுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *