நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. அங்குள்ள 222 இடைத்தங்கல் முகாம்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.
அதற்கடுத்ததாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 முகாம்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் 155 முகாம்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கியுள்ளனர்.
இதேவேளை, இந்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
2-3 மாதங்களுக்குள் அக்குடும்பங்களை மீள்குடியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த முகாம்களில் தங்கியுள்ள சிலரின் வீடுகள் முழுமையாகவும், மேலும் சிலரின் வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தாம் வசித்த இடங்களில் நிலவும் ஆபத்து நிலைமை காரணமாக மீண்டும் அவ்விடங்களில் குடியேற மற்றுமொரு தரப்பினர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அதற்கமைய, அத்தரப்பினருக்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 மாத வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதே தற்போது சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகளை வழங்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதற்காக அரச காணிகள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.
