நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்களை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறிய வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் தற்போது சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.
அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் பல சோதனைகளை முன்னெடுத்ததுடன், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக பல விசேட நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இதன்போது, மொத்த அரிசி விற்பனைக் கடைகள் நுகர்வோர் அதிகாரிகளின் உளவாளிகளால் சோதனை செய்யப்பட்டதுடன், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலையை மீறுதல் மற்றும் விலையை காட்சிப்படுத்தாததற்காக வழக்குகளைத் தாக்கல் செய்ய அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ததாக நீதிமன்றில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், ஒரு தனிப்பட்ட வணிகத்திற்கு ரூ. 100,000 முதல் ரூ. 500,000 வரையிலும், ஒரு நிறுவனத்திற்கு ரூ. 500,000 முதல் ரூ. 50 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டுக்காட்டியுள்ளது.