வட்டவளை பகுதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளாதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்ததில் லொறியில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு ஆரம்ப சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இன்று (21) அதிகாலை 2:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஹட்டனில் இருந்து தங்கொட்டுவ நோக்கிச் சென்ற லொறி, எதிர் திசையில் சென்ற லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த விபத்தைத் தவிர்க்க முயன்றபோது பிரதான வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
இதற்கிடையில், கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பயணியொருவர் விபத்தைப் பார்க்க சென்று மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது பயணி தவறி விழுந்து பேருந்தின் முன் சக்கரத்தின் கீழ் அவரது கால் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாரென்று வட்டவளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த இரு விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
