தேசிய பாதுகாப்புக்கு பெரும் நெருக்கடி சரத் வீரசேகர குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பொருட்படுத்தாமல் செயற்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் தொடர்ந்து நீடித்தால் இனவாத பிரச்சினைகள் உருவாகி நாட்டின் பாதுகாப்புக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் பல்வேறு கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பாதாள குழுத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்துகொள்வதல்ல இதிலுள்ள பிரச்சினை. ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் அப்பாவிக் குழந்தைகள் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பின்னணியில் அச்சத்துடனும் பயத்துடனுமே மக்கள் வீதியில் செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பாதுகாப்பு என்ற விடயத்தை கிடப்பில் போட்டுள்ளது. குற்றச்செயல்களை தவிர்த்துக்கொள்வதற்காகவே வீதி தடைகள் போடப்பட்டிருந்தன. ஆனால் அந்த வீதித் தடைகளை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் குற்றவாளிக்கு சாதக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் புலனாய்வுத் துறை மிகவும் அவசியமாகும். ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றதன் பின்னர் மீண்டும் தவறு இடம்பெறாமல் தடுப்பதை விட, அசம்பாவிதம் இடம்பெறாமல் தடுப்பதே திறமையாகும். அதற்காகவே புலனாய்வு தகவல்களும் புலனாய்வுத் துறையும் பலமாக இருக்கவேண்டும்.

இராணுவப் புலனாய்வின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட அனுபவம் கொண்ட ஆறு பேரை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நீங்கியுள்ளது. சகலராலும் புலனாய்வு அதிகாரிகளாகிவிட முடியாது. அதற்கு அனுபவம், பின்னணி, விசேட திறன், கற்கை நெறிகளை முடித்திருக்க வேண்டும். அவ்வாறான புலனாய்வு அதிகாரிகளை நினைத்தது போன்று இடமாற்றம் செய்தால் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதாள குழுத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவை கம்பஹாவில் வைத்து கொலை செய்வதற்கான திட்டம் இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்தது. அதனாலேயே அந்த வழக்கு விசாரணையை கொழும்புக்கு மாற்றினார்கள். கொழும்புக்கு மாற்றினால் தவறு இடம்பெறாதா? எனவே இந்த விடயத்தில் பாரிய தவறு இடம்பெற்றுள்ளது என்றே கருதவேண்டும்.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமையின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கும் அப்பால் அடிப்படைவாத, சமய அடிப்படைவாதம் மற்றும் இனவாதம் என சகலவையும் தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்தில் கொள்ளாமையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் ஆகிய இரு பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் போராட்டம் செய்வது மாத்திரமல்லாமல் இனவாதத்தையும் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். இனவாதத்துக்கு இடமளிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

அவ்வாறெனில் கஜேந்திரகுமார் செய்வதெல்லாம் இனவாதம் இல்லையா. இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. இந்த இனவாதத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள்ளாகும்.

பிரபுக்களின் பாதுகாப்பை குறைத்த அரசாங்கமே இன்று மீண்டும் பிரபுக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் பிரபுக்கள் யாராவது கொலை செய்யப்படுவார்களாக இருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். எனக்கு என்றால் பாதுகாப்பு அவசியமில்லை என்று ஜனாதிபதி அநுரவே கூறுகிறார். பாதுகாப்பு தொடர்பில் உள்ள இதுபோன்ற கவனமின்மையே இதுபோன்ற நிலைமைகளுக்கு காரணமாக அமையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *