சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அனைவரின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, சந்தையில் நடக்கும் தவறுகள் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைகிறது.
இந்த நாளில் நுகர்வோர் பாதுகாப்பு, நியாயமான வர்த்தகம் மற்றும் நிலையான நுகர்வு மேம்பாடு ஆகியவற்றில் அதிக அவதானம் செலுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார,
“இந்த ஆண்டு உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள், நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் என்பதாகும். சுற்றுச்சூழலுடன் பொறுப்புள்ள வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக இந்த நான் அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக, நிலையான, ஆரோக்கியமான மற்றும் நியாயமான தேர்வுகள் அனைத்து நுகர்வோருக்கும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் இருப்பதை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம், முடிந்தவரை நிலையான தயாரிப்புகளை நுகர்வோர் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் நெறிமுறை வணிகங்களை ஆதரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எமது நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்து பணியாற்றும்.”