அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அறைக்குச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (09) காலை உயிர்மாய்ப்பு செய்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் 6 மாதங்களாக மன அழுத்தம் தொடர்பில் சிகிச்சை பெற்று வந்திருந்ததாகவும் அத்துடன் 3 மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை என்பதுடன் இந்த உயிர்மாய்ப்புக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்த பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு பார்வையிட்ட பின்னர் சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை வேளை உயிரிழந்த மாணவனின் தந்தை தொழுகைக்காக ஆயத்தம் செய்த நிலையில் இவ்வாறு அவரது மகன் உயிர்மாய்ப்பு செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
