மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்திர வட்டியை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையால் மின்சார இணைப்பு வழங்கப்படும்போது நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் இந்த பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு செலுத்தப்பட வேண்டிய வருடாந்த வட்டித் தொகையை  நுகர்வோருக்கு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, உயர்நீதிமன்றத்தால் இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையால் 2024 ஜனவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சீராக்கல் மனுவில் குறிப்பிடப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கியால் செலுத்தப்படும் 11.67% வருடாந்திர வட்டியை உள்நாட்டு மின்சார நுகர்வோருக்கும், ஏனைய மின்சார நுகர்வோருக்கும் செலுத்த வேண்டும் என, எஸ். துரை ராஜா, சோபித ராஜகருணா ஆகியோர் உள்ளடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.


இலங்கை மின்சார சட்டத்தின் 28/3 பிரிவின் படி பெறப்பட்ட வருடாந்திர வட்டித் தொகையை நுகர்வோருக்கு செலுத்துமாறு, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கம், அந்த சங்கத்தின் தலைவர் மஹேஷ் பண்டார இலங்கசிங்ஹ மற்றும் செயலாளர் பிரசாத் பாதிய அமரகோன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.


மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர், பொது பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.


மனுதாரர் தரப்பிற்காக கலாநிதி சிரேஷ்ட சட்டத்தரணி சந்திரநாத் தாபரே ஆஜரான நிலையில்,  பிரதிவாதிகள் சார்பாக அரசாங்க சட்டத்தரணி சுரேகா அஹமட் ஆஜராகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *