கிரிக்கெட் உலகின் பலம்வாய்ந்த 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கிண்ணம் என அழைக்கப்படும் ஒன்பதாவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 8 வருடங்களின் பின் இன்று கோலாகலமாக பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது.
பல தடைகளுக்கு மத்தியில் 29 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பாகிஸ்தான் மண்ணில் ஓர் ஐ.சி.சி தொடர் நடைபெறவுள்ளது. எனினும் பி.சி.சி.ஐ யின் தனித்துவமான உறுதிப்பாட்டின் காரணமாக இந்திய அணியின் போட்டிகள் மாத்திரம் டுபாயில் நடைபெறுகிறது.
முதல்முறையாக இந்த தொடர் 1998ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா வென்ற முதல் ஐ.சி.சி தொடர் என்பது இதுவாகும்.
இதைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு நியூசிலாந்து சம்பியன் பட்டமும், 2002ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி மழை காரணமாக தடையான நிலையில் ரிசர்வ் டேவில் அறிவிக்கப்பட்டது. அப்போதும் மழை குறுக்கிட்டதால் இந்தியாவும், இலங்கையும் சம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டது.
2004ஆம் ஆண்டு இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியாவும், 2009ஆம் ஆண்டு நியூசிலாந்தை வீழ்த்தி மீண்டும் அவுஸ்திரேலியாவும், 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும், 2017ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தானும் சம்பியன் பட்டத்தை வென்றன.
இந்நிலையில் 8 ஆண்டுகளின் பின் மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண தொடர் இன்று ஆரம்பமாகிறது. தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குழு ஏயில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குழு பியில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளும் உள்ளன.
12 லீக் போட்டிகளும், அரையிறுதி, இறுதி என மொத்தமாக 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் தலா ஒரு போட்டி வீதம் மொத்தமாக 3 போட்டிகளில் மோதும். இதில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இன்று முதல் மார்ச் 2ஆம் திகதி வரை லீக் போட்டிகளும், மார்ச் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் அரையிறுதி போட்டிகளும், மார்ச் 9ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் இறுதிப்போட்டிக்கான மைதானம் இந்திய அணியின் இறுதிப்போட்டி தேர்வை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
இன்று கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன. அனைத்து போட்டிகளும் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். தொடரின் மொத்த பரிசு தொகை 6.90 மில்லியன் டொலர்களாகும்.இது 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 53 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டொலர்களும், அரை இறுதி சுற்றில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா 560,000 டொலர்களும், 5, 6-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா 350,000 டொலர்களும், 7, 8-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா 140,000 டொலர்களும் லீக் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு 34,000 டொலர்களும் வழங்கப்படவுள்ளது. மேலும் தொடரில் கலந்து கொள்வதற்காக 8 அணிகளுக்கும் தலா 125,000 டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணி இல்லாத முதல் சம்பியன்ஸ் கிண்ண தொடராகவும் இது அமைந்துள்ளது. ஐ.சி.சி ஒருநாள் அணிகளின் தரவரிசையில் இலங்கை அணி தற்போது ஐந்தாமிடத்தில் காணப்பட்டாலும், கடந்த 2023 ஐ.சி.சி உலகக்கிண்ண தொடரின் இறுதி புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி முதல் 7 இடங்களுக்குள் முன்னேற தவறி 9ஆவது இடத்தை பிடித்ததால் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
எனினும் உலகக்கிண்ண தொடரில் ஆறாமிடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ளது. தற்போது பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்திவரும் ஆப்கானிஸ்தான் அணி எதிரணிக்கு சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.