அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுகள், ஐ.நா. நிறுவனங்கள், சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் பரோபகாரர்களிடமிருந்து பெறப்படம் பொருட்கள் முறையாகவும் சரியான நேரத்திலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இக்குழு இயங்குவதுடன் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தில் (NDRSC) நிறுவப்பட்ட விசேட செயலகம் மூலம் செயல்படும்.
வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிவாரணப் பொருட்கள் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம அலுவலர் மட்டம் உள்ளிட்ட நிர்வாக மட்டங்களில் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன, ஒதுக்கப்படுகின்றன மற்றும் கண்காணிக்கப்படுகின்றன என்பதைத் தீர்மானிப்பதற்குப் பொறுப்பான தேசிய ஒருங்கிணைப்பு மையமாக இது செயல்படும்.
NDRSC ஆல் பராமரிக்கப்படும் ஒருங்கிணைந்த தேசிய தேவைகள் தரவுத்தளத்துடன், கிடைக்கப் பெரும் வெளிநாட்டு உதவிகள் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்வதே குழுவின் முதன்மைப் பங்காகும். கிராம அலுவலர் (GN), பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தரவுத்தளம், எங்கு, எப்படி பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான அடிப்படையை தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது.
அத்துடன் இந்தக் குழு, தாமதங்களைக் குறைத்து, இடைவெளிகளை நிவர்த்தி செய்து, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவிகள் கிடைப்பதற்கு முன்னுரிமை கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.
