வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

யாழ். பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளினால், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மேல்முறையீடு இன்று (06) உயர்நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான அரச வழக்கறிஞர் நீதிமன்றத்தின் முன் கருத்து முன்வைத்து, இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க ஒரு திகதியை அறிவிக்குமாறு கோரியுள்ளாா்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மேல்முறையீடு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணை செய்ய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு பேருக்கு யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால்  மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, நீதியரசர்கள் குழாம் தங்களுக்கு தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், அதன் காரணமாக மேல் நீதிமன்ற தீர்ப்பை நீக்கி தங்களை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து முழுமையாக விடுவிக்குமாறு கோரி இந்த மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *