வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக- தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இ. தொ. கா. கோரிக்கை

நிராகரிக்கப்படும் வாக்கு எண்ணிக்கை குறைப்பதற்கு வாக்குச்சீட்டின் மாதிரியை மாற்றுக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய தேர்தல்கள் ஆணை குழு தலைவரை சந்தித்து கலந்துரையாடி யுள்ளது 

 பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவிப்பு

வாக்குச் சீட்டின் மாதிரியில் மாற்றத்தை ஏற்படுத்தி நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள ஆலோசனையை கரிசனையோடு கவனத்தில் கொள்ளப்படும். என தேசிய தேர்தல்கள் ஆணை குழு தலைவர்  ஆர் . எம். ஏ. எல் . ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற ,மற்றும் மாகாண சபை தேர்தலில் நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு சிபாரிசுகளை முன் வைத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் இடையில் நேற்று ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணை குழு தலைமை அலுவலகத்தில்

கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது மலையக மாவட்டங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தலின் போது நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகிறது.

வாக்காளர்கள் தமது எண்ணங்களை சரியாக வெளிப்படுத்த முடியாத நிலையில் வாக்குச்சீட்டு மாதிரி அமைந்திருப்பதே இதற்குப் பிரதான காரணம் என நாம் கருதுகிறோம். நிராகரிக்கப்படும் வாக்குகளினால் தாம் விரும்புகின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய முடியாத நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்படுகின்றனர்.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளில் சுயேட்சை குழுக்களுக்கு இலக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கும் இலக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஒரே வகையான இலக்கங்கள் இரண்டு இடத்தில் இடம் பெறுவதால் அது வாக்காளர்களை குழப்பமடைய செய்கிறது.

இதனால் அவர்கள் வாக்குச்சீட்டில் இடம் மாறி புல்லடியிடுகின்ற நிலைமை அதிகரிக்கிறது. அதாவது விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு பதிலாக சுயேட்சைக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தின் மேல் புல்லடி இடுகின்றனர். இது குறிப்பிட்ட வாக்குகளை நிராகரிப்பதற்கு வழி வகுக்கின்றது. இதற்கு தீர்வாக வாக்குச் சீட்டின் மாதிரியில் மாற்றத்தை ஏற்படுத்தி வாக்குச் சீட்டை இலகு படுத்த வேண்டுகிறோம். சுயேட்சை குழுக்களுக்கு வழங்கும் இலக்கத்தை எழுத்து வடிவிலும், வேட்பாளர்களுக்கு வழங்கும் இலக்கத்தை எண் வடிவிலும் வழங்கினால் அது வாக்காளர்களுக்கு சுலபமாக இருக்கும் என நாம் சிபாரிசு செய்கிறோம். 

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணை குழு கலந்துரையாடி உள்ளது.‌ ஏற்கனவே தேர்தல்கள் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளும்படி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். அதனுடன் சேர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள ஆலோசனைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். இவ்விடயம் அரசியல் யாப்புடன் தொடர்பான விடயமாகையால் பாராளுமன்றத்தின் ஊடாகவே திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்து அதன் அடிப்படையில் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தமது தரப்பு சிபாரிசுகளை மேற்கொள்ளும் எனவும் தேர்தல்கள் ஆணை குழுவின் தலைவர் தெரிவித்தார். 

தேர்தல் ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் அதன் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், மற்றும் உப தலைவர் எஸ். ராஜமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *