வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (03) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

இலங்கைக்கும், திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்விஜயத்தின் போது, பேராயர் கல்லாகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். 

இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறித்து, கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ள சிறப்பு நினைவு நிகழ்வில் பேராயர் கல்லாகர் உரை நிகழ்த்தவுள்ளார். 

2019 ஆம் ஆண்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கள விஜயம் செய்வதும் இந்நிகழ்ச்சியில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *