முதல் முறையாக வத்திக்கான் அரசாங்க நிர்வாகத்தின் தலைவராக கன்னியாஸ்திரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உரோம் நகரில் உள்ள வத்திக்கான் உலகில் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமையிடமாக உள்ளது. வத்திகானின் அரசியல் தலைவராக பாப்பரசர் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது வத்திக்கான் நிர்வாக தலைவராக இருக்கும் கர்தினல் பெர்னாண்டோ வெர்கஸ் அல்ஸகா வரும் மார்ச் 1ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து குறித்த பதவிக்கு கன்னியாஸ்திரி ரபேயல்லா பெட்ரினியை பாப்பரசர் நியமித்துள்ளார்.
இவர் இதற்கு முன்னர் வத்திக்கான் அருங்காட்சியகத்தின் செயலாளர் ஜெனரலாக இருந்தார்.
வத்திக்கானிலுள்ள பாப்பரசர் அலுவலகத்தில் பல்வேறு பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்க நிர்வாகத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.