நடப்பாண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களில் 30 சதவீதமானவை சுங்கத்தால் விடுவிக்கப்படவில்லையென அரசாங்க நிதி பற்றிய குழுவின் இந்த வருடத்தின் முதலாவது அரையாண்டை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட குழு மதிப்பாய்வுகளில் தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற செயலாளர் அலுவலகத்தின் அறிவித்தலுக்கமைய இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் சுங்கத்துக்கு 996 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது கடந்த வருடத்தின் முதல் 06 மாத வருமானங்களுடன் ஒப்பிடும்போது நூற்றுக்கு 47 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த வளர்ச்சியில் வாகன இறக்குமதியினூடாக 429 பில்லியன் ரூபா பங்களிப்பு கிடைத்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் நாட்டுக்கு 220,026 வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 154,537 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்பாட்டுத் திட்ட மதிப்பாய்வின்போது அரச நிதி தொடர்பில் பாராளுமன்ற குழு சுங்க விடுவிப்புக்கான தாமதம் தொடர்பில் வினவப்பட்டுள்ளதுடன், அதன்போது மூன்று தினங்களில் வாகனங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
