28.03.2025 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி
இன்றைய தினம் மியன்மாரில் உள்ளூர் நேரம் பிற்பகல் 12.50 மணியளவில் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த புவிநடுக்கத்தின் மையம் மியன்மாரின் சகைங் நகரிலிருந்து வட மேற்கு திசையில் 16 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் காணப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் புவிநடுக்கப் பதி கருவியில் ( Seismograph) 7.7 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இந்த புவிநடுக்கத்திற்கு சகைங் நகரத்தின் கீழ் உள்ள இந்தியக் கவசத்தகடும் யுரேசியக் கவசத்தகடும் அருகருகாக நகர்ந்தமையே பிரதான காரணமாகும்.
சகைங் நகரத்தின் கீழ் உள்ள ஒரு குறை/ பிளவு உள்ளது. குறை/ பிளவு என்பது புவித்தகட்டில் ஏற்படும் விரிசல் ஆகும். இது எதிர் திசைகளில் நகரும் இரண்டு ரெக்ரோனிக் தகடுகளைப் பிரிக்கிறது. அந்தத் தகடுகள் வருடத்திற்கு 0.7 அங்குலங்கள் (18 மிமீ) என்ற விகிதத்தில் ஒன்றையொன்று கடந்து நகர்கின்றன. இது குறிப்பிடத்தக்க அளவு இயக்கமாகும். இதன் விளைவே இந்த புவி நடுக்கமாகும்.
மியன்மாரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தாய்லாந்திலும், தென் சீனாவிலும் வட கிழக்கு இந்தியாவிலும் உணரப்பபட்டுள்ளது.
இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், உயிரிழப்புக்கள் ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1400 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் சேத விபரங்கள், மீட்பு பணிகள் முழைமையாக நிறைவடைந்த பின்னரே அறிய முடியும். தற்போது பல வெளிநாடுகளின் நேரடியான பங்கெடுப்பில் நிகழ்கிறது.
மியன்மார், தாய்லாந்து மக்களின் மீட்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமையவும், இடிபாடுகளில் சிக்குண்ட மக்கள் ஆரோக்கியமாகவும் மீட்கப்படவும் இறைவனை பிரார்த்திப்போம்.
இலங்கையின் நிலை
இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது. எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் இதே நிலைமை தான் எதிர்காலத்திலும் நிலவும் என்று எண்ணுவது பிழை. என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
புவிநடுக்க அனர்த்தம் முன்கூட்டியே எதிர்வு கூற முடியாத, தடுக்க முடியாத இயற்கை அனர்த்தமாகும். ஆனால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முடியும். ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன.
ஆகக்குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
இல்லையேல் 2004ம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை.
– நாகமுத்து பிரதீபராஜா –