அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள 2025ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு எதிர்த்தரப்பைச் சேர்ந்த 12 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழு விடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
மேலும், உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான இதற்கு முன்னர் அரசியல் கட்சிகளினால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை மீள கொடுத்தால் மாத்திரமே எதிர்வரும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தக் கூடியதாக இருக்குமென்றும் அந்தக் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளன.
இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற போதே எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளினால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பிலும் கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“விரைவாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆழமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஆனால், தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரை வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்த்தரப்பில் 12 கட்சிகளை சேர்ந்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கிறார்கள்.
ஆளுங்கட்சித் தரப்பில் 159 பேர் இருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நாங்களே முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டி ஏற்படும். அப்படியென்றால் 66 பேரும் பாராளுமன்றத்தில் இருந்து விவாதங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
இதற்கிடையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகினால், தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படும். அதற்கமைய, வரவு செலவுத்திட்ட விவாதங்கள் முடிந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
அதேபோன்று கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு 80,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். பெருந்தொகை பணமும் கட்டுப்பணமாக செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கட்சி ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக தொகை பணத்தை செலவு செய்துள்ளது. எனவே, ஏற்கனவே கட்டுப்பணமாக செலுத்திய பணத்தை மீளப்பெற்றுக்கொண்டதன் பின்னரே மீண்டும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தக் கூடியதாக இருக்கும்.
அரசியல் கட்சிகள் என்ற அடிப்படையில் எங்களிடம் பெருந்தொகை பணம் இல்லை. மக்கள் விடுதலை முன்னணிக்கு மாதாந்தம் 05 கோடி ரூபா அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினூடாக 60 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அந்த கட்சியின் கணக்குக்கு வைப்பிலிடப்படுகிறது. ஆனால் எங்களுக்கு அப்படியொரு நிலைமை இருக்கிறது. எனவே, நாங்கள் ஏற்கனவே செலுத்திய கட்டுப்பணம் மீள கிடைத்ததுமே மீண்டும் கட்டுப்பணத்தை செலுத்தக் கூடியதாக இருக்கும்.
மூன்றாவது காரணம் ஏப்ரல் மாதம் தமிழ் சிங்கள புத்தாண்டு காலம் என்பதால் தெரிவத்தாட்சி அதிகாரிகள் உள்ளிட்ட சகல அரச உத்தியோகத்தர்களும் அந்த மாதத்தில் பணிபுரிய நேரிடும். அதுதொடர்பிலும் சிந்தித்தே செயற்பட வேண்டும் என்பதுடன் சாதாரண தரப் பரீட்சைத் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கோரியுள்ளோம்.
திருத்தப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் சட்டத்தினூடாக அடுத்த தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது.
இந்த சகல விடயங்களின் அடிப்படையிலும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இருக்கும் நெருக்கடி நிலைமையை கவனத்தில் கொண்டு சாதாரண காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்தமாறும் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதுடன் இதுதொடர்பில் சகல கட்சி செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரியுள்ளோம்” என்று சுட்டிக்காட்டினார். அதற்கமைய, தேர்தல் ஆணைக்குழு விரைவில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.