மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகிறது-சாணக்கியன் எம்.பி

மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக நாட்டில் அநீதி இழைக்கப்படுவதாக, பாராளுமன்ற அமர்வின் இரண்டாவது உரையின் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவர் ஆற்றிய உரையில், 

மனோ கணேசன் மற்றும் சகோதரர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் மிக முக்கியமான ஒரு முன்மொழிவை முன்வைத்துள்ளனர். உண்மையில் மலையக மக்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்ட பொழுது தான் இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாமும் இந்த கட்சி உருவாகியதே. அந்தவகையில் இந்த விடயம் தொடர்பில் பேசுவதற்கு சகல உரிமையும் எமக்கு உண்டு. மிக முக்கியமாக இதுவொரு முன்மொழிவு மாத்திரமே என்று சில உறுப்பினர்கள் கூறினார்கள். 

இது என்னுடைய வாழ்க்கையில் கேள்விபட்ட மிக முட்டாள்தனமான முன்மொழிவு இதுதான். 2 இலட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து கட்டிட வசதி இல்லாமையால் 2 இலட்சத்து 14 ஆயிரம் பேரை 14 அல்லது 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு செல்வதா? அல்லது 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் இருக்கின்ற இடத்தில் புதிதாக கட்டிடங்களை கட்டுவதா? இதை போன்றதொரு முட்டாள்தனமான முன்மொழிவை நான் எனது வாழ்க்கையிலேயே கேட்டதில்லை. 

வன்னி மாவட்ட உறுப்பினரும் இவ்விடயம் தொடர்பாக பேசியமை மகிழ்ச்சி அளிக்கும் விடயம். மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியை சேர்ந்த எவரும் பேசாது விட்டது ஒரு சர்ச்சையான விடயம். பெரிய ஆச்சரியமாக உள்ளது. நான் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எமது சகோதர மலையக மக்களுக்காக நோர்வுட்டில் இருக்கும் மக்களுக்காக பேசுகின்றேன். அண்ணன் சந்திரசேகரன் அவர்களாவது இது தொடர்பில் பேச வேண்டும். 

உண்மையில் இந்த விடயத்தை பொருத்தவரையில், நீங்கள் இந்த கட்டிடத்தை புகையிரத நிலையத்தின் மேல் மாடிக்கு கொண்டு செல்ல எண்ணுகின்றீர்கள். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்திலே 7.7 ட்ரில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகள் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியினுடைய சொந்த கிராமத்தில் தம்புத்தேகம எனும் பிரதேசத்தில் ஒரு புகையிரத நிலையம் கட்டுவதற்கு, அதனை கட்டலாமா? இல்லையா என ஆராய்வதற்கு 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நோர்வுட் பிரதேசத்தில் ஒரு பிரதேச செயலகத்தை கட்டுவதற்கு எவ்வளவு செலவு போகும்? ஒரு மாதத்திற்குள் கட்டிடத்தை கட்டி, ஒரு புதிய பிரதேச செயலகத்தை உருவாக்கி 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுடைய வாழ்க்கையை இலகுபடுத்துவதா? அல்லது 110 ஊழியர்களினுடைய தேவைக்காக இந்த கட்டிடத்தை கொண்டு செல்வதா? 

மலையக மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்டது என்பதை மறக்கக் கூடாது. இந்த நாட்டிலே மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு விடயமாக இந்த நோர்வுட் பிரதேச செயலகத்தில் இருந்து இந்த பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரத்திற்கு மாற்றினால் இந்த வரலாற்றிலே மலையக மக்களுக்கு துரோகம் செய்தோர் பட்டியலில் நீங்களும் உள்வாங்கப்படுவீர்கள் என்பதை நீங்கள் மறக்க கூடாது. மிக முக்கியமாக சகோதரர் ஜீவன் தொண்டமான் கூறியதை போன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் தான் எந்தவொரு தெளிவான நிலைப்பாடும் இல்லை. எந்த இணக்கமும் இல்லை என்று கம்பனி முதலாளிமார் அல்லது கம்பனி சங்கங்கள் கூறியுள்ளன. 

மலையகத்திலிருந்து வாக்குகளை அள்ளித்தந்து ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது, இந்த பாராளுமன்றத்தில் நீங்கள் வெறும் சிக்னல் லைட்களாக இருப்பதற்கு மட்டுமல்ல. சபாநாயகர் கூறினார் சிவப்பு போட்டால் நிற்க வேண்டும். பச்சை போட்டால் ஓட வேண்டும். அதற்காக மக்கள் உங்களை தெரிவுசெய்யவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதற்காகவே மக்கள் உங்களை தெரிவுசெய்தனர். அந்தவகையில் இந்த பிரதேச செயலக விவகாரம் மிக முக்கியமான ஒரு விடயம். எனவே இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு இது ஒரு முன்மொழிவாகவே மாற்றப்பட வேண்டும் என இந்த சபையிலே மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *