பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் மிக விரைவில் – வட மாகாண ஆளுநர் உறுதி

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடுகளும், வாழ்வாதார உதவிகளும் மிக விரைவில் உங்களை வந்து சேரும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று (12) நடைபெற்ற உலக மண் தின நிகழ்வு மற்றும் ‘அறுவடை’ சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எற்பட்ட இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டும் போதாது. அவர்கள் தங்கள் முன்னைய நிலையை விடப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேலோங்கி வர வேண்டும் என்பதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறோம். 

அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டு நாம் மண்ணில் கொட்டிய இரசாயன உரங்கள், இன்று அந்த மண்ணை மட்டுமல்ல, நம்மையும் நோயாளிகளாக்கியுள்ளன. ஒரு காலத்தில் அநுராதபுரம், பொலனறுவையில் மட்டுமே அதிகம் காணப்பட்ட சிறுநீரக நோய், இன்று முல்லைத்தீவு, வவுனியா வரை பரவியுள்ளது. இது எமக்கு விடுக்கப்பட்ட மிகத் தெளிவான எச்சரிக்கை மணி. யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சின்ன வெங்காய விளைச்சல் சில பகுதிகளில் குறைந்து போனதற்கு, மண் தன் வளத்தை இழந்து மலடாகிவிட்டதே காரணம்.

விவசாயிகள் பழைய முறைகளுக்குத் திரும்ப வேண்டியதில்லை. ஆனால் புத்திசாலித்தனமான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். மண்ணைப் பரிசோதித்து, என்ன சத்து தேவையோ அதை மட்டும் இடுங்கள். இது செலவைக் குறைக்கும், மண்ணைக் காக்கும். இரசாயன உரத்துடன் தொழுவுரம், மண்புழு உரம் போன்ற சேதனப் பசளைகளையும் கலந்து பயன்படுத்துங்கள். ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், பயறு, உளுந்து போன்ற மண்ணுக்குச் சத்துத் தரும் பயிர்களை மாற்றி மாற்றிப் பயிரிடுங்கள். தொழில்நுட்பம் மற்றும் சொட்டு நீர்பாசனம் மூலம் பயிருக்குத் தேவையானதை மட்டும் துல்லியமாக வழங்குங்கள். இது விளைச்சலை இருமடங்காகப் பெருக்கும்.

வெள்ளம் வடிந்திருக்கலாம், ஆனால் அது உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறவில்லை. ஆசையாக வளர்த்த பயிர்களையும், பிள்ளைகள் போல் வளர்த்த கால்நடைகளையும் பறிகொடுத்துவிட்டுப் பலர் நிர்கதியாய் நிற்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகக் கூறுகிறேன், நீங்கள் தனித்து விடப்படவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசு உங்கள் துயரை முழுமையாக உணர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடுகளும், வாழ்வாதார உதவிகளும் மிக விரைவில் உங்களை வந்து சேரும் எனத் தெரிவித்தார். 

மேலும், இந்நிகழ்வில், டித்வா பேரிடரில் உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *