புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கனேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கனேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் பாதாள உலகக்குழு உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவின் முக்கிய போட்டியாளராவார்.
இவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவருமாவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கனேமுல்ல சஞ்சீவ, அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள நீதிமன்ற பிரதிவாதி கூண்டில் வைத்து அவர் சுடப்பட்டதுடன், சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் பிரதிவாதி கூண்டுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவ பிரதிவாதி கூண்டிலிருந்து இறங்கத் தயாரான போது, குறித்த நபர் சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உட்பட 5 விசேட குழுக்களின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதே வேளை நீதிமன்ற அறையில் கூண்டில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ தொடர்பான விசாரணைகளில் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு கொழும்பு தலைமை நீதிமன்ற பதிவாளருக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளையும் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வழங்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
சஞ்சீவ உயிரிழப்பு தொடர்பாக வாழைத்தோட்ட பொலிஸார் தாக்கல் செய்த பி அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த பி அறிக்கையை வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சுஜித் பிரியந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சம்பவம் குறித்து புகார் அளித்த பொலிஸ் அதிகாரிகள், அந்த நேரத்திலேயே விரிவான விசாரணை தொடங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை தயாராகிவிட்டதால், அது தொடர்பான உத்தரவுகள் கோரப்பட்டன.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி கோரப்பட்ட தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்து அவரது பங்கேற்புடன் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.