பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கிலுள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா பகுதியில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் வழிமறித்து கடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் என்ற பிரிவினைவாத அமைப்பு இந்தக் கடத்தலை செய்துள்ளனர்.
பலுச் தீவிரவாதிகள், ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து, ரயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர். 6 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற அவர்கள், ரயிலின் 9 பெட்டிகளில் 400 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் 100 பேரை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பலுச்அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“6 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவம் ஏதேனும் இராணுவ நடவடிக்கை எடுத்தால், அனைத்து பணயக்கைதிகளும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இதற்கான முழுப் பொறுப்பும் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தான் விழும்” என்று கூறப்பட்டுள்ளது.