தமிழரசுக் கட்சியின் கதவடைப்புக்கு மறுப்பு.. முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரின் கோரிக்கை

இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்கு ஆதரவினை வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை எடுத்த தீர்மானத்தை எண்ணி மனக்கவலை அடைந்துள்ளேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், “கடந்த பல வருடங்களாக தமிழ்மக்கள் தங்களது சுதந்திரமான வாழ்தலுக்கான உரிமை போராட்டத்தில் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர்.

போர் முடிவுற்ற போதும் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருகின்றமை நீங்கள் அறிந்ததே. அந்த நிலையில் எம் மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அனைத்து போராட்டங்களிலும் வவுனியா வர்த்தகர் சமூகம் தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

தீர்க்கமான நெருக்கடியான தருணங்களிலும் கூட தமிழ்த்தேசிய மக்களின் அறவழி போராட்டங்களுக்கு எந்தவித தடங்கல்களும் இல்லாமல் அவர்களது போராட்டம் வெற்றிபெறுவதை முன்னிறுத்தி வர்த்தகர் சமூகம் நல்ல முடிவுகளை எடுத்திருக்கின்றது.

இந்த கதவடைப்பு போராட்டமானது ஒரு அரசியல் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அது தமிழ்த்தேசிய மக்களின் அடிப்படை உரிமைகளையும், பிரச்சனைகளையும் மையப்படுத்தியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எனவே நீங்கள் எடுத்துள்ள இந்த முடிவு தமிழ்மக்களின் நீண்டகால நீதிக்கான காத்திருப்பில் ஒரு அவப்பெயரையோ அல்லது வரலாற்று தவறையோ ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது எனது நிலைப்பாடு.

அந்தவகையில் கட்சிஅரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்ற வர்த்தகர் சங்கத்தின் முடிவினை மறுபரிசீலணை செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *