தபால் கட்டணங்களில் இன்று முதல் ஏற்படும் மாற்றம்

இன்றைய தினம் முதல் தபால் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச தபால் முத்திரை கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

பதிவு தபால் கட்டணத்தில் மாற்றமில்லை எனினும், சாதாரண முத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பதிவு தபாலுக்கான மொத்த கட்டணம் 110 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாதாரண மற்றும் வர்த்தக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை 20 கிராமிலிருந்து 30 கிராம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, முன்பு 20 கிராம் கடிதம் அனுப்ப 50 ரூபா வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதல் 20 ரூபா சேர்த்து 70 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதே கட்டணத்தில் 30 கிராம் வரையிலான கடிதங்களை அனுப்ப இயலும் என்றும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விளம்பரப் பிரசுரங்களை விநியோகிக்கும் சேவைக்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

ஒரு பிரசுரம் அல்லது பிரசுரக் கட்டுப்பெட்டியின் அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து 120 கிராம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முன்மொழியப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது குறைந்தபட்ச முத்திரை கட்டணத்தை 100 ரூபா ஆக உயர்த்த முன்மொழியப்பட்டிருந்தாலும், நிதி அமைச்சின் அனுமதி 20 ரூபா உயர்விற்கே வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *