அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
கடந்த 1865ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் அந்த நாட்டில் அடிமைகளாக வசித்த கருப்பின மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 1868ஆம் ஆண்டில் பிறப்பு குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதாவது சட்டவிரோதமாக குடியேறியவர்கள், கல்வி, வேலைவாய்ப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் குழந்தை பெற்றால்கூட அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பிறப்பு குடியுரிமை நடைமுறையை இரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரும் 20ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜனநாயக கட்சி ஆளும் 22 மாகாணங்களின் அரசுகள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சில தொண்டு அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இதன்படி மேரிலேண்ட் பெடரல் நீதிமன்றத்தில் 2 தன்னார்வ தொண்டு அமைப்புகள், வெளிநாடுகளை சேர்ந்த 5 கர்ப்பிணிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை கடந்த 5ஆம் திகதி விசாரித்த மேரிலேண்ட் பெடரல் நீதிமன்றம், பிறப்பு குடியுரிமை இரத்து உத்தரவுக்கு தடை விதித்தது.
ஜனாதிபதி ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை இரத்து உத்தரவை எதிர்த்து வொஷிங்டன், அரிசோனா, இலினொய், ஒரிகன் ஆகிய மாகாண அரசுகள் சியாட்டில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு கடந்த 24ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கிளார் கஹனோர், ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுக்கு 14 நாட்கள் தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து சியாட்டில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு நேற்று (06) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி ஜான் கிளார் கஹனோர் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது. இது அடிப்படை உரிமை. இதனால்தான் சர்வதேச அளவில் அமெரிக்கா உயர்ந்து நிற்கிறது. ஜனாதிபதியின் ஓர் உத்தரவால் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு தடை விதிக்க முடியாதென உத்தரவிட்டுள்ளார்.