சட்டவிரோத பாம்புகளுடன் சிக்கிய பெண்

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக ‘அத தெரண’ விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் வழியாக 06 பாம்புகளை சட்டவிரோதமாக வௌியேற்ற முயன்றபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து இந்தப் பாம்புகளை அந்தப் பெண் கொள்வனவு செய்துள்ளதுடன், அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் சூட்சுமமாக அவற்றை மறைத்து வைத்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபர் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 40 வயதான வர்த்தகர் என தெரியவந்துள்ளது. 

Speckled Kingsnake, Yellow Anaconda, Honduran Milk Snakes, Ball Python உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 06 பாம்புகளை அவர் கொண்டு வந்துள்ளார். 

அவர் இந்த பாம்புகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், இவ்வாறான பாம்புகள் நாட்டின் காட்டுப் பகுதிகளில் விடுவித்தால் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்ற உயிரினங்களை விமானத்தில் கொண்டு வருவது சட்டவிரோதமானது மற்றும் மிகவும் ஆபத்தான செயல் என்பதுடன், விலங்குகளை கொண்டு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளை சுங்க அதிகாரிகள் அழைத்து, இது குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, சுங்க விசாரணைக்குப் பிறகு பாம்புகளை மீண்டும் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *