கொழும்பு துறைமுகத்தை நேற்று (16) வந்தடைந்த கப்பலிலிருந்து 31,000 மெற்றிக் தொன் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்றும் இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், சட்டவிரோத வியாபாரத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே நிபந்தனைகள் விதிக்கப்பட் டுள்ளனவே தவிர மக்கள் எரிபொருள் கொள்வனவு செய் வதற்குத் தடை விதிக்கப்படவில்லை’’ என்று இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயுர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எரிபொருள் இருப்பில் இருக்கிறது. சட்டவிரோத வியாபாரத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதே தவிர, மக்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை.
திட்டமிட்டப்படி நேற்று (16) காலை எரிபொருள் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. மாதிரி பரிசோதனைகளின் பின்னர் எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். இதனூடாக 18,000 மெட்ரிக் தொன் டீசல், பெற்றோல் 10,000 மெட்ரிக்தொன், 3000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் என்பன கிடைக்கப்பெறும்.
அதனடிப்படையில் வழமைபோல் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சகல கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்தடைந்துள்ளன. இன்று வரையில் (நேற்று) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 1,616 மெட்ரின் தொன், லங்கா ஐ.ஓ.சிக்கு 204 மெட்ரிக் தொன், சிபெட்கோவுக்கு 247 மெட்ரிக் தொன், ஆர்.எம். பார்க் தனியார் நிறுவனத்துக்கு 248 மெட்ரிக் தொன் என்ற அடிப்படையில் கொள்முதலுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த எரிபொருள் தொகை எந்தவொரு தடையுமின்றி விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வாகன கைமாற்றம் மற்றும் கைபேசி இலக்கங்கள் மாற்றமடைந்து பதிவு செய்ய முடியாமலிக்கும் நபர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறும் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்’’ என்றார்.
