உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.
அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், டைட்டானிக் கப்பலில் இருந்து கர்னல் ஆர்ச் சிபால்ட் கிரேசி என்பவர் எழுதிய ஒரு கடிதம் லண்டனில் ஏலத்துக்கு விடப்பட்டது. அதனை ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் என்பவர் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு (இந்திய மதிப்பு) வாங்கினார்.
அந்தக் கடிதத்தில் பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என தீர்ப்பு வழங்க முடியும் என எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.