அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் வரும் – அமைச்சர் வசந்த

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைகாரணமாக கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், 80 சதவீதமான உருளைக்கிழங்கு, 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதமான சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘நாளாந்தம் அதிகரித்து வரும் யுத்த நிலைமை எமது நாட்டில் விநியோக வலையமைப்பில் குறிப்பாக எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் மாத்திரமல்லாமல் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறோம். குறிப்பாக உருளைக்கிழங்கு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதியே செய்கிறோம்.

போதுமானளவு அரிசி இருப்பில் இருக்கிறது. 03 04 மாதங்களுக்கு தேவையான அரிசியை விட அதிக அரிசி உற்பத்தி எமது நாட்டில் தற்போதும் உற்பத்தி செய்யப்படுகிறது. 80 சதவீதமான உருளைக்கிழங்கு , 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதம் சீனி போன்றன வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. நெத்திலி போன்ற உலர் மீன்களுக்கும் நேரடித் தாக்கம் ஏற்பட்டது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த விநியோக வழிகளில் இருக்கும் நிலைமை சகல நாடுகளுக்கும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. அதனால், விலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எரிபொருள் விலை அதிகரித்ததைப்போன்று ஏனைய சிறு சிறு பொருட்களுக்கும் விலைகளில் சிறியளவான மாற்றம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் இதுதொடர்பில் கலந்தாலோசித்து நுகர்வோருக்கு இந்த அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

அதனால், எவ்வாறான முகாமைத்துவப் பணிகளை முன்னெடுத்தாலும் நாளாந்தம் இடம்பெறும் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். எரிபொருள் கப்பல்கள் காலதாமதமானால் அதனால் பாதிப்பு ஏற்படக் கூடும். இருந்தபோதும் ஏப்ரல் மாதம் வரை கிடைக்க வேண்டிய 04 கப்பல்கள் எரிபொருள் விநியோகத்துக்கான உறுதிப்பாட்டை அளித்துள்ளன.

ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை எரிவாயு விநியோகத்தை பெற்றுக்கொடுத்து வருகிறார்கள். தனியார் எரிவாயு நிறுவனம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைளை முன்னெடுக்காமல் ஓரளவு காலதாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரச ரீதியாக அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

20 சதவீதமே தனியார் எரிவாயு நிறுவனம் இயங்குகிறது. ஹம்பாந்தோட்டையில் தனியான முனையமொன்றே இருக்கிறது. அதில் 30,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை களஞ்சியப்படுத்த முடியும். வரி செலுத்தி எரிபொருள் விநியோகிப்பதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *