அதிவேக வீதிகளில் மீண்டும் STF

நேற்று (11) இரவு முதல் அதிவேக வீதிகளுக்கு விசேட  அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.எம்.பி. சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.அதிவேக வீதிகளில் திடீர் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த அரசாங்கத்தின் போது பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணைந்ததாக பாதுகாப்பு அமைச்சினால் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த கடமையில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அகற்றப்பட்டனர். அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீட்டிப்பு, கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதி, புதிய களனி பாலம் மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால், உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்கு இந்த அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், கடந்த காலங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பல்வேறு நபர்களால் கொழும்பு-கட்டுநாயக்க வீதியில் புதிய களனி பாலம் மற்றும் கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியில் சொத்துக்கள் திருடப்படுவது குறித்து கவனம் செலுத்தி, குறித்த சொத்துக்களைப் பாதுகாக்க 20 அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *